சபரிமலை வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படும் – உச்சநீதிமன்றம் இன்று முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டபின், கோவிலுக்குள் நுழைய முயன்ற பத்திரிகையாளர்கள் உள்பட 10 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, இருமுடி சுமந்து கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி உட்பட பலர் ஐயப்ப தரிசனம் செய்தனர்.
இதனிடையே, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என திருவிதாங்கூர் தேவஸம் போர்டு கடந்த 19-ஆம் தேதி முடிவு செய்தது. பல்வேறு அமைப்புகள் சார்பில் இதுவரை 19 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் நவம்பர் 13-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.