சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் – தேவசம் போர்டு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் கூறியுள்ளர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. மிக நீண்ட காலமாக இந்த வழக்கத்தை கடைபிடித்து வரும் நிலையில் இதனை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில், ஆன்மிக நடைமுறைகளை அனுசரிப்பது இயலாது என்பதோடு, ஐயப்பன் பிரம்மச்சாரி என்ற அடிப்படையிலும் தேவசம் போர்டால் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒத்த கருத்தையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில், சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. கடவுளை வணங்குவதில் ஆண் – பெண் பாகுபாடுக் கூடாது. கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என குறிப்பிட்டார். இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பத்ம குமார் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு பரிசீலனை மனு தாக்கல் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.