புதுடில்லி: ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துபவர்களுக்கு, மூளை கேன்சர் ஏற்படும் வாய்ப்பு 400 சதவீதம் அதிகமாக உள்ளது என மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய இளைஞர்களிடம் ஸ்மார்ட்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இதனால் ஆபத்துகளும் அதிகரித்துள்ளன.
இதுகுறித்து மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் கூறியபோது;
ஸ்மார்ட்போனை அதிகநேரம் பயன்படுத்துவதால், கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். ஒருநாளைக்கு அரை மணி நேரத்துக்கும் மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே அதிகம்தான்.
செல் போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால், ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள், கதிர்வீச்சு ஆழமாக ஊடுருவுகிறது.
இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கிறது. மேலும் அலைபேசி கதிர் வீச்சால் தாவரங்கள் மற்றும் விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இன்றைய இளைஞர்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.இதனால் ‘மூளை கேன்சர்’ ஏற்படும் அபாயம் 400 சதவீதம் அதிகமாக உள்ளது.
இந்த கதிர்வீச்சு மனிதனின் மரபணுவில் மாற்றமுடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது. அலைபேசியை தலையின் அருகில் வைத்து அதிகநேரம் பயன்படுத்துவதால், துாக்கமின்மை, நரம்பு கோளாறு, ஞாபக மறதி, நடுக்குவாதம் (பார்கின்சன்) போன்ற நோய்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
நவீன தொழில்நுட்பங்கள், மக்களுக்கு பல வழிகளிலும் நன்மை அளிக்கிறது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்பைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நமது பயன்பாடு இருந்தால் நல்லது.