கடலூரில் தனியார் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கரித்துகள்கள் மக்களுக்கு பாதிப்பு – மக்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கரித்துகள்கள் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் IL&FS தனியார் அனல்மின் நிலையத்துக்கு கொண்டுவரப்படும் நிலக்கரியை சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதனால் நிலக்கரித் துகள்கள் காற்றில் பறந்து மக்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் பரவி குடிநீர், உணவு, நீர்நிலை உள்ளிட்டவற்றில் படிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கடல் வழியில் இருந்து கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக கடற்கரையில் துறைமுகம் அமைத்து அங்கிருந்து கன்வேயர் மூலம் நிலக்கரியை கொண்டுவர நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுக்குப்பம் பகுதி முழுவதும் கரித்துகள்கள் படிந்திருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.