கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விக்ரம் ரூ. 25 லட்சம் நிதிஉதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக விக்ரம் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளிக்கிறார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களை சூறையாடி சென்றுள்ள கஜா புயல், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடும் சேதத்தை விளைவித்து உள்ளது. கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை என்று பல பகுதிகளில் மக்கள் தங்களின் வீடு மற்றும் விவசாய நிலத்தை இழந்து, அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் நிதியுதவி அளிப்பதுடன் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் விக்ரம் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் இன்று ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கிறார்.
திரையுலகினர் சார்பில் வழங்கப்பட்டதிலேயே அதிகபட்சமாக லைகா நிறுவனம் ரூ. 1 கோடியே 1 லட்சம் நிதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.