இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்த – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை, முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக்கோரி, ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிக்கைக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டால் மட்டும் போதாது, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. வாகனங்களில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மேலும் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை அவர்களே நடைமுறைப்படுத்தாதது ஏன் ? எனவும் கேள்வி எழுப்பினர்.
இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் மேட்டார் வாகன சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.