இன்று பிரதமரை சந்திக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

டெல்லி சென்றுள்ள முதல்வர் பார்லி வளாகத்தில் அதிமுக எம்.பி., களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும் டெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகத்தையும் பார்வையிட உள்ளார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என நம்பப்படுகிறது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதலை விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது. முன்னதாக நேற்று மாலை அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் எடப்பாடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் இதுகுறித்து முதல்வர், பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நிலவும் தற்போதய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றே சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் நாளை 9-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கரும் புதுடெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க இருக்கிறார். முன்னதாக நேற்று டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.