ஆந்திராவில் எம்எல்ஏ க்கள் சுட்டுக்கொலை- மாவோயிஸ்டுக்கள் வெறியாட்டம்!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவேரி சோமா ஆகியோர் அரக்கு தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமமான, தூட்டங்கியில் நடைபெற்ற ‘கிராம தர்ஷினி’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை அங்கு சென்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மனுக்களை எம்எல்ஏ விடம் கொடுத்தனர். அதனை பெற்றுகொண்டு உங்கள் குறைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
பின்னர் எம் எல் ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏவுமான சிவேரி சோமா ஆகியோர் காரில் ஏறி புறப்பட்டனர். தூட்டங்கியை அடுத்த அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்றபோது, மாவோயிஸ்டுகள் பலர் குறுக்கே பாய்ந்து காரை வழிமறித்தனர்.
மாவோயிஸ்டுகள் காரிலிருந்து இருவரையும் பலவந்தமாக கீழே இறக்கினர். சிவேரி சோமாவை சுமார் 50 அடி தூரம் தரதரவென்று இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்கள் சர்வேஸ்வர ராவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.
மாவோயிஸ்டுகளின் இந்த கொலை வெறிச்செயலுக்கான கரணம் இன்னும் தெரியவில்லை.