அடுத்த வருடத்திலிருந்து இந்தியாவிற்கு ரஷ்யா எஸ்-400 ரக ஏவுகணை வழங்க தொடங்கப்படும் – மத்திய அரசு

400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ்-400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானபடைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் மூலமாக வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கைகளையும் மீறி , கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகளை ரூ.40 ஆயிரம் கோடி செலவில் வாங்கும் ஒப்பந்தம் கையெழுதானது.
இந்நிலையில் எஸ்-400 ரக ஏவுகணை தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் சுபாஷ் பாமரே மக்களவையில் பதில் அளிக்கையில் ” ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் இந்தியாவிற்கு 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து வரத்தொடங்கும், 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்தும் வழக்கப்பட்டுவிடும் ” என தெரிவித்துள்ளார்.















