அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய தீப கற்பத்தில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் முதல் முறையாக இவ்விரு தலைவர்கள் நடுவே இன்று நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதுபற்றி ட்ரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், முக்கிய ஆவணத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அது விரிவான ஆவணமும் கூட. நாங்கள் இன்னும் பல முறை கூட சந்திக்க உள்ளோம். கிம் ரொம்பவே திறமையானவர் என்பதையும், தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதையும் அவருடனான சந்திப்பின்போது, அறிந்து கொண்டேன் என்றார். வெள்ளை மாளிகைக்கு கிம்மை வரவேற்பீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு, கண்டிப்பாக அழைப்பேன் என்றார்.
கிம் ஜாங்க் உன் கூறுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. கடந்த காலத்தை மறக்க முடிவு செய்துள்ளோம் என்றார். உலகம் புதிய மாற்றங்களை பார்க்க உள்ளது என்றார். முன்னதாக சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மிக்க மதிய உணவை இருவரும் இணைந்து சாப்பிட்டனர்.
இரு தலைவர்களும் கையெழுத்திட்ட அந்த ஆவணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றபோதிலும், ட்ரம்ப் அந்த ஆவணத்தை பிரஸ் மீட்டில் காண்பித்தபோது புகைப்படமாக அது பதிவானது. அதில் உள்ள வார்த்தைகள் இப்போது உலகமெங்கும் அறியப்பட்டு வருகிறது.
அதில் கூறியுள்ள சாராம்சம் இதுதான்:
அதிபர் ட்ரம்ப், சேர்மன் கிம் ஜாங் உன் இருவரும் விரிவான, ஆழமான மற்றும் உண்மையான வகையில், அமெரிக்கா-வடகொரியா (DPRK) நடுவேயான உறவு தொடர்பான சிக்கல்களை பேசினர். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, இரு நாடுகள் நடுவே புதிய உறவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரிய தீப கற்பத்தில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படும். கொரிய தீப கற்பத்தில் முற்றாக அணு ஆயுதத்தை ஒழிக்க வட கொரியா பணிகளை மேற்கொள்ளும்.
வியட்நாம் போரின்போது, காணாமல் போன மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா-வட கொரியா இணைந்து ஈடுபடும். ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட அமெரிக்க சிப்பாய்களை விரைந்து அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
வட கொரியா அணு ஆயுதங்களை குவித்து வந்த நிலையில், அமெரிக்கா போன்ற மற்றொரு அணு ஆயுத வல்லரசு நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், உலகம் முழுக்கவே போர் பீதி நிலவியது.
ஆனால், இவ்விரு நாடுகள் நடுவே இன்று கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், உலக அமைதிக்கான முன்னெடுப்பாகவும் கவனிக்கப்படுகிறது. இதனால் சீனா உள்ளிட்ட பல நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.