காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்!!
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு நீண்ட இழுபறிக்குப்பிறகு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தது.
கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு தொடர்ச்சியாக வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரி இழுத்தடித்து வந்த நிலையில் தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசின் நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையான அமைப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும் என்றார்.
மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு காலம். அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார். இந்த அமைப்பில் மொத்தமாக 9 பேர் உண்டு. அதில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார். 9 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர். பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர். காவிரி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.