நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தபோதும் நீட் தேர்வை கைவிட மத்திய அரசு மறுத்துவிட்டது. கடந்த மே 6ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவு தேர்வை 13 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இதில் வெறும் 60,000 பேர் மட்டுமே இந்த தேர்வில் தகுதி பெற்றனர். இதனால் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் பேசினார். அப்போது நீட், ஜேஇஇ, யூஜிசி- நெட், ஜிபேட் மற்றும் பிற போட்டித் தேர்வுகளை என்டிஏ எனும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் என்றார். நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்
இரண்டு முறை தேர்வெழுதலாம்
இரண்டு முறையும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் இதில் பெறப்படும் சிறந்த மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
கணினி மூலம் மட்டுமே தேர்வு
கணினி மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். தேர்வுகள் வெளிப்படையானதாக இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை என்று அமைச்சர் கூறினார்.
கல்வியாளர்கள் கருத்து
தேசியத் தேர்வு முகமைமூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் . ‘ வருங்காலங்களில், பணம் கொடுத்தால்தான் கல்வி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கும் வகையில் திட்டங்களை வகுக்கின்றனர்’ எனக் கொந்தளிக்கின்றனர்.