திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை (ஜுன் 01)திறப்பு!!!
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும்.
ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை வியாழக்கிழமை முடிவுக்கு வருகிறது.
இதையடுத்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறைக் காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என முன்னதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
அதேசமயம் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் செய்து வருகின்றனர்.
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகிஉள்ளது.