fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ரஜினியின் அகோர முகம் தெரிந்து விட்டது காலா திரைப்படத்தை வெளியிடமாட்டோம்;நார்வே தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!!

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற போன ரஜினிகாந்த் தூத்துக்குடியிலும், சென்னை விமான நிலையத்திலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசிய பேச்சுக்கள்  அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. அவர் நடிப்பில் ஜூன் 7 அன்று வெளிவர உள்ள காலா திரைப்படத்தின் வியாபாரத்தையும் அது ஒட்டுமொத்தமாக  பாதித்திருக்கிறது.

தமிழ் படங்களின் வெளிநாட்டு வியாபாரத்தின் பெரும் பகுதி புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களைச் சார்ந்திருக்கிறது.

நார்வே நாட்டில் தமிழ்ப் படங்களை விநியோகிக்கும் நார்வே தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் குழு காலா படத்தை திரையிடுவதில்லை என அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக அந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் வசீகரன் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம்

தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம்.

எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றன.

எமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜினிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.

கடந்த சில மாதங்களாக அவருடைய “ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை 30.05.18 அன்று கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்!

கடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜினி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை!.

எமது 13க்கும் மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவு வீட்டில் “ஒரு நடிகனாக தான் போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்” என்று மிகவும் கீழ்த்தரமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்!

இவற்றின் வெளிப்பாடாக நார்வே நாட்டில் இனிமேல் தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.

இத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜினிகாந்த் இன்று

தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்டங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்!

தமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார், போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம். எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை!

இவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திரையிடமாட்டடோம்!

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேன். “காலா” திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது!

இப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன் வந்துள்ளார்கள்!

ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் !

உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்!

உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் !” இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close