எட்டு வழிச்சாலை கருத்துக்கேட்பு கூட்டம் – பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு!
சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை கருத்து கேட்பு கூட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை சேலம் இடையே அமைய உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் அளவு செய்யும் பணி முடிந்த நிலையில் இதுதொடர்பாக நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக கடந்த 7ம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 10-ஆம் தேதியும் கூட்டங்கள் நடைபெற்றன. மூன்றாவது கட்டமாக சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம் விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் பசுமை வழிச்சாலை திட்டம் தேவை இல்லை எனவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் விளைநிலங்களை விட்டுத்தர மாட்டோம் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயிகள் கூறினர்.