அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதன் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015 முதல் 2018 வரை தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆக இருந்த ஜி. உமா விடைத்தாள் மறுமதிப்பீடு மாணவர்களிடம் ஒரு பாடத்திற்கு 10,000 வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் மொத்தமாக மூன்று வருடத்தில் இரண்டு லட்சம் மாணவர்களிடம் 400 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உமாவுக்கு உதவியாக 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு கீழ் 100க்கும் அதிகமான பேராசிரியர்கள் செயல்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் இந்த லஞ்ச விவகாரத்தில் ஒத்துழைக்காத ஆசிரியர்களை மறுகூட்டல் பணியிலிருந்து மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
கல்வித்துறையில் நடைபெற்றுள்ள இந்த மாபெரும் லஞ்ச விவகாரம் கல்வியாளர்கள் இடையேயும், பொது மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் அறையிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.