குட்கா விசாரணை சிபிஐ தொடங்கலாம்…. உச்சநீதிமன்றம் அதிரடி
குட்கா வழக்கில் சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில், தடைசெய்த குட்கா பொருள்களை விற்பனைசெய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுவந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் பெற்றார் என்றும் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்ச்சியளிக்க , சி.பி.ஐ விசாரணை வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு, சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதன்படி, தி.மு.க-வின் கோரிக்கை ஏற்கப்பட்டு, வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.