மோடியின் வெளிநாட்டு பயணத்தால் மீண்டும் தாமதமாகும் காவிரி செயல் திட்டம்

ஜூன் முதல் தேதிக்கு முன்பாக அமலுக்கு வரும் என்று சொல்லப்பட்ட காவிரி செயல்திட்டம் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் மீண்டும் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த செயல்திட்டமானது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதுபோல் இன்று தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தற்போது வரை காவிரி செயல்திட்டமானது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வரைவு திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி அன்று அந்த ஆண்டுக்கான நீர் கணக்கிடும் ஆண்டின் தொடக்கம் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதியில் தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள அணைகளில் உள்ள நீரை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே வேளையில் மேற்கண்ட 4 மாநில அரசுகளும் தங்களுக்கான நீர் தேவை குறித்தும் அதை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பது குறித்தும் அறிக்கையாக ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வரைவு செயல்திட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி ஒழுங்குமுறை குழுவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் 3 முறை கூட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது ஜூன் 1-ஆம் தேதிக்கு முன்னதாகவே காவிரி செயல்திட்டமானது அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை காவிரி செயல்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வாரம் புதன்கிழமை அமைச்சரவை கூடும் போது இந்த வரைவு செயல்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் அதுவும் இல்லை என்றாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் ஜூன் 2-ஆம் தேதி அன்று டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் புதன்கிழமை அமைச்சரவை கூடுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து மத்திய நீர் வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங்கிடம் கேட்டபோது காவிரி செயல் திட்டத்துக்கு இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை. புதன்கிழமை அமைச்சரவை கூடாவிட்டாலும் வேறு எந்த வகையிலாவது ஒப்புதல் பெற்று காவிரி செயல்திட்டத்தை அரசிதழில் வெளியிடுவோம் என்றார்.