மீன்களை பதப்படுத்த புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலப்பு:மக்கள் அதிர்ச்சி!
சென்னையில் விற்கப்பட்ட மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட மீன் மார்க்கெட்களில் விற்கப்படும் மீன்களை பதப்படுத்த ரசாயனம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக இறந்த மனித உடல்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும், ஃபார்மலின் ரசாயனத்தை மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க கலப்பதாகவும் புகார்கள் வந்த நிலையில் இன்று சிந்தாதரிப்பேட்டை மீன் மார்க்கெட்களில் மீன்வளத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சில கடைகளில் இருந்த மீன்களை பரிசோதித்து, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுக்கு அனுப்பினர்.
ஆய்வில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் தெளிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
ரசாயனம் தெளிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபார்மலின் ரசாயனம் என்பது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும்.
கேரளாவில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஃபார்மலின் தெளிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மீன்களில் பெரும்பாலானவை தமிழகத்திற்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த மீன்கள் எனக் கூறப்படுகின்றது.
இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 30 மீன்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதில் 11வகையான மீன்கள் ஃபார்மலின் தெளிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீன்களில் ரசாயனம் தெளிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால், மீன் வாங்குவதில் பொதுமக்களிடையே அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்களின் விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.