fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தேவை: அன்புமணி ராமதாஸ்

காவிரி நீர்பங்கீடு குறித்து மத்திய அரசு அமைக்கும் ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் சிக்கல்களை தீர்க்க முடியும் என, பாமக இளைஞரணித் தலைவரும் , பாராளும்மன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. வரைவுத் திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றால் பயனில்லை.

மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்படும்; காவிரி நீர் பகிர்வு குறித்த சிக்கலில் ஆணையத்தின் முடிவே இறுதியானது; மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருவுக்குப் பதிலாக டெல்லியில் அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய அரசு தானாக முன்வந்து செய்தவை அல்ல. மாறாக, உச்ச நீதிமன்ற ஆணைப்படி செய்யப்பட்ட திருத்தங்கள்தான் இவை. இவற்றில் காவிரி ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கர்நாடகத்தில் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தால், ஆணையத்தில் பணியாற்றும் வல்லுநர்களும், அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கும். இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மற்ற இரு திருத்தங்களும் தமிழகத்திற்கு சாதகமானவை போன்று தோன்றினாலும் அது உண்மையல்ல. புதிய அமைப்பு எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. அவற்றுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். காவிரி அமைப்புக்கு ஆணையம் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது? என்பதுதான் கேள்வி.

காவிரி பிரச்சினையில் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், காவிரி ஆணையத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும், அதனைச் செயல்படுத்தும் அதிகாரம் இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? அத்தகைய சூழலில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

உதாரணமாக, அடுத்த மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கர்நாடகம் சுமார் 134 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 மாதங்களில் கர்நாடக அணைகளில் ஒட்டுமொத்தமாகவே 200 டிஎம்சிதான் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில் தமிழகத்திற்கு 80 டிஎம்சி அல்லது 100 டிஎம்சி வழங்க வேண்டும் என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு தான் உண்டு என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.

அவ்வாறு ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் போது அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் எதார்த்தம். கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இந்த ஆணையத்தின் முடிவை மதிக்குமா?

எனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்குக் குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்ச நீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது” என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close