மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு !

டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர் மற்றும் தமிழக காவிரி தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சுப்பிரமணியம் கலந்து கொள்கின்றனர்.
மேகதாது பிரச்சனை குறித்து ஆணையத்திடம் தமிழகம் முறையிட்டது. மேலும் ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என கூறி உள்ளது.
புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் முதலமைச்சர் குமாரசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசு, திறக்கும் தண்ணீரையும் தடுப்பதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.















