8 வழிச்சாலைக்கு எதிராக நடை பயணம் தொடரும்:கே. பாலகிருஷ்ணன் உறுதி!
உயர்நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று சேலம் – சென்னை 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் தொடர இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“என் நிலம் என் உரிமை” என்ற பெயரில் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் நடைபயணம் கடந்த ஒன்றாம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கியது.
பயணம் தொடங்கி 10 மீட்டர் செல்வதற்குள் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்தனர்.
பின்னர் இரவு முழுவதும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்குப் பின்னரும் 90 பேர் மூன்றாவது முறையாக நடை பயணத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
நீதிபதிகள் அவர்களை ஜாமீனுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் கைது செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் சிறை செல்ல விரும்பியதால் 90 பேரையும் நீதிமன்றமே தன் சொந்த ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
எத்தனை தடைகள் வந்தாலும் எட்டு வழிச்சாலைதிட்டத்தை எதிர்த்து மீண்டும் நடை பயணத்தை தொடர இருப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற அனுமதிக்கு பின்னரும் மீண்டும் கைது செய்யப்பட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.