தூத்துக்குடி நகரெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்!;போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலி!!!
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற கலவரத்தில் மொத்தம் 10 பேர் பலியாகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000க்கும் மேற்ப்பட்டோர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூடும் நடத்தினர். இதனால் தூத்துக்குடியே கலவர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஒரு பெண், 3 வாலிபர்கள் உட்பட இதுவரை 10 பேர் பலியாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும், பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் எனத் தெரிகிறது.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் ஆங்கங்கே நடைபெற்று வருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளதையே காட்டுகிறது.