வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு தாய்லாந்தின் நிதி உதவியை ஏற்க இந்திய அரசு மறுத்துவிட்டதாக அந்நாட்டு தூதர் தகவல்
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு, மின்சார வசதி, பிளம்பிங், மர வேலைகள் என பல வகைகளில் கேரளாவை சீரமைக்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி பல்லாயிரம் கணக்கானோர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இதனடிப்படையில் பல மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
குறிப்பாக தமிழகம் கேரளவுக்குக்கு பல வகைகளில், நிவாரண நிதி மற்றும் பொருட்களை அனுப்பி வருகிறது.
வெளிநாட்டினரும் நிதிஉதவி செய்ய விழைகின்றனர். வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வெளிநாடுகளின் நிதியுதவியை பெற இந்திய அரசு மறுத்துவிட்டதாக இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் பேரழிவைக் கண்டுள்ள கேரளத்தில் சீரமைப்பு, மறுவாழ்வுப் பணிகளுக்காகப் பல்வேறு நிறுவனங்களும், அமைப்புகளும் நிதியுதவி பொருளுதவி செய்து வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய முன்வந்திருப்பதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
தாய்லாந்தும் கேரளத்துக்குத் தங்கள் பங்குக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள தாய்லாந்து தூதரகம் இந்திய அரசைத் தொடர்புகொண்டு தெரிவித்தது.
அதற்கு, கேரளத்தின் வெள்ளப் பேரிடர் தணிப்பு நிதிக்காக வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கள் நன்கொடையை ஏற்க இந்தியா மறுத்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தாய்லாந்து மக்களின் எண்ணம் இந்திய மக்களுடனே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் தருவதாகக் கூறியுள்ள 700 கோடி ரூபாயையும் இந்தியா ஏற்குமா என ஐயம் எழுந்துள்ளது.
இதனிடையே கேரளத்தின் வெள்ளப் பேரிடர் தணிப்பு நிதிக்காக வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவி ஏற்றுக்கொள்ளப்படாது என மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிதியுதவிக்கும் இது பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெளிநாட்டு நிதியுதவியை ஏற்பது பற்றிய இறுதி முடிவை வெளியுறவு அமைச்சகமே எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் நன்கொடைக்கு வரிவிலக்கு உண்டு என உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.