ரூ 1.50 லட்சம் செலவில் தாங்களே ஏழு கிலோமீட்டர் பாசன வாய்க்காலை தூர் வாரிய விவசாயிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் பொதுமக்களே ஏழு கிலோமீட்டர் பாசன வடிகால் வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம்,விட்டுக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் பல ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வருவது தடைபட்டு இருந்தது.
வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வாய்க்கால்களை தூர்வார அரசு நிதி ஒதுக்கியும் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் 1.50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வரம்பியம் முதல் திருவாரூர் சாலை வரை ஏழு கிலோமீட்டர் தொலைவுக்கு பாசன வாய்க்காலை தூர் வாரி சீரமைத்தனர்.
கொஞ்சமாவது மக்களையும், விவசாயிகளையும் சிந்தித்து அரசு செயல்பட வேண்டும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.