மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெற உள்ளது. முத்தலாக், அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டுள்ளது.
மேலும் புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மத்திய ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் வரிந்து கட்டும் என எதிர்பார்ப்பு நிலவுவதால் கூட்டம் அமைதியாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும், பசு பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், வன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் அவையில் எழுப்ப திட்டமிட்டுள்ளன.