பெட்ரோல் டீசல் விலையில் ரூ. 2.50 காசுகள் குறைப்பு – அருண் ஜெட்லி அறிவிப்பு !
சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.33-க்கும், டீசல் விலை லிட்டர்க்கு ரூ.79.79-க்கும் விற்பனையாகிறது.இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை 2 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளதால், பெட்ரோல் டீசல் விலையும் தினம்தினம் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று அவசர அலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, தற்போதைய பொருளாதார நிலையை மத்திய அரசு மிகவும் உண்ணிப்பாக கவணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில் பேரலுக்கு 86 டாலராக உயர்ந்துள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக இருக்கிறது. எனவே, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரூ.1.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையில் ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது.
மொத்தமாக பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 காசுகள் குறைகிறது. கலால் வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.21,000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மாநில அரசும் இதேபோன்று விலைகுறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு மாநிலங்கள் எங்களின் வலியுறுத்தலை ஏற்று விலையை குறைத்தால் மொத்தம் ரூ.5 குறைய வாய்ப்புள்ளது.