பாலியல் பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட பிராங்கோ மூலக்கலின் ஜாமீன் மனு நிராகரிப்பு !
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆயர் பிராங்கோ மூலக்கல் ஜாமீன் மனுவை கேரள உயநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். அதில் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவர், கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. பிஷப் பிரான்கோ மூலக்கல், ஜாமின் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அவரை ஜாமினில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் எனவும், சாட்சிகளைக் களைக்கக் கூடும் என்றும் போலீசார் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.