சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சென்னையில் நேற்று மாலைமுதல் சூளைமேடு, அரும்பாக்கம், போரூர், தாம்பரம், அம்பத்தூர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பின்னர் நள்ளிரவிலும் தொடர்ந்த மழை சூறைக்காற்றுடன் பெய்தது. ராமாபுரம், நெற்குன்றம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியது.
இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி மாவட்டம் லால்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2-வது நாளாக கனமழை பெய்தது.
இன்றும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.