நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி எனக்கு தான்…. எடியூரப்பா நம்பிக்கை ..
முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு பிஜேபி தலைமை அலுவலகத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் எடியூரப்பா உரையாற்றியது : காங்., மஜத தலைவர்கள் பேச்சு ஜனநாயக விரோதம். இவர்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன், மக்கள் பதில் கூறிவிட்டனர். பாஜக அதிகாரத்திற்கு வருவது பிடிக்காமல் சதி செய்கிறார்கள். விவசாயிகள், நெசவாளர்கள் கடன் தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
ஆளுநர் அவகாசம் கொடுத்துள்ளபோதிலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காத்திருக்க மாட்டேன். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் குண்டர்கள் பிடியில் உள்ளதை போல வைக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்கு கூட தொலைபேசியில் பேச அனுமதிக்காமல் பிடித்து வைத்துள்ளனர். அங்குள்ள நிலவரம் பற்றி, உளவுத்துறை மூலம் எனக்கு தகவல்கள் வந்து கொண்டுள்ளன. மோடி விரும்பியபடி, காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவாக மாறியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க என்ன செய்ய போகிறோம் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், பாஜக அரசு 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபித்தே தீரும். சட்டசபையில் கலவரத்தில் ஈடுபட காங், மஜத திட்டமிட்டுள்ளனர். அதற்கு அரசு அனுமதிக்காது. அடுத்த வருடம் கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகளையும் பாஜக வெல்லும். கர்நாடகாவில் இரவு, பகல் பாராமல் தேர்தல் பிரசாரம் செய்த மோடிக்கு 28 எம்பிக்கள்தான் பரிசு. இவ்வாறு எடியூரப்பா பேசினார். இதனிடையே ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை எடியூரப்பா வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளார். இதனால் எம்எல்ஏக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.