தன் மகனை விசாரணைக்கு அழைத்து சென்று, ரயில்வே போலீசார் கொலை செய்து தண்டவாளத்தில் எறிந்ததாக பெற்றோர் புகார்!

திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்தவர் மவுலீஸ்வரன். கல்லூரி மாணவனான அவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள ரயில்வே கேட் அருகே நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த போது ரயில்வேக்கு சொந்தமான அலுமினியக் கம்பி திருடியதாக அவரை ரயில்வே போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி – எளாவூர் இடையே ரயில் தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
மாணவனை கொலை செய்துவிட்டு ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் வீசிவிட்டதாக கூறிய பெற்றோர், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்புபடை ஆய்வாளர் அங்கத்குமார், காவலர் வினய்குமார் ஆகிய இருவரும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ரயில்வே போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மவுலீஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரயில்வேக்கு சொந்தமான வயர், கம்பி உள்ளிட்ட பொருட்களை திருட முயன்றதாகவும் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் விசாரணை நடத்தும் போதே அவர் தப்பியோடி விட்டதாக கூறியுள்ள போலீசார், மாணவன் தப்பியோடும் காட்சிகள் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்தால் அசிங்கம் என கருதி, மவுலீஸ்வரன் ரயில் தண்டவாளத்தில் நின்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.