சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதாக கைது செய்யப்பட்ட பாஜக வழக்கறிஞர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் !
தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மரியாதை செலுத்திக்கொண்டிருந்தபோது பைக்கில் அங்கு வந்த வழக்கறிஞர் ஜெகதீசன் என்பவர் பெரியார் சிலை மீது ஷூக்களை வீசிவிட்டு தப்பியோடினார்.
அவரை மடக்கிப்பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஜெகதீசனை அடித்து உதைத்தனர். அவரைக் காவல்துறையினர் மீட்டு கைது செய்தனர். அவர் எதற்காக பெரியார் சிலை நோக்கி காலணி வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு நாட்களிலேயே ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம், சிலை அவமதிப்பில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இந்த நடவடிக்கை அமையும் என நம்பப்படுகிறது.