fbpx
RETamil Newsதமிழ்நாடு

மனிதத்தை மறந்த மக்கள்;மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மனிதம் எங்கே சென்று விட்டது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரம்  ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் அவர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் பல இடங்களில் காவலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தவர்  கொரோனா பாதிப்பால் நேற்று  உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் மருத்துவர்  உயிரிழப்பது இதுவே  முதலாவது ஆகும் இதுவரை மருத்துவர் யாரும் தமிழகத்தில் உயிரிழக்கவில்லை.

அவரது சடலத்தை அண்ணா நகர் வேலங்காடு  பகுதியில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது அவரை அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர்.

மேலும் கற்களை வீசி அவர்கள் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது.

உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், உருட்டு கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கியுள்ளனர்.

இதனால் ஆம்புலன்ஸ் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் இருந்து தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர்.

பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது.

தற்பொழுது இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இதையடுத்து  கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் பாதுகாப்பாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை புரிந்த மருத்துவரின் உடலையே  மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close