மரணதண்டனை வழங்கும் சட்டம்:
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரணதண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
காஷ்மீரின் கதுவாவில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதுபோலவே உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி எம்.எல்.எ. மற்றும் சிலரால் கற்பழிக்கப்பட்டார். இந்த இரு கொடூர சம்பவங்கள் நாடு முழுவதும் பல தரப்பினரிடையே கொந்தளிப்பையும், போராட்டங்களையும், ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21–ந் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
“குற்றவியல் சட்ட திருத்த மசோதா 2018” என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றபட்டது . இதனை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார்.
இந்த சட்டம் இப்பொழுது அமலுக்கு வந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், குற்றவியல் சட்ட திருத்தம் எனும் இந்த சட்டம் ஏப்ரல் 21-ந் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்குவதற்கான வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை அல்லது மரணதண்டனை வழங்கப்படும். 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையிலிருந்து 20 வருடங்களாக அதிகரிக்கப்படுகிறது. கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது.