fbpx
Others

அண்ணாமலைக்கு–ஆதிதிராவிடர் நலத்துறை பதிலடி…

மாணவர்களுக்கான நிதி வீணடிக்கப்பட்டதா? அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை பதிலடி…
மாணவர்களுக்கான நிதி வீணடிக்கப்பட்டதா? அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை பதிலடி!

 ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படாமல் விடுபடவில்லை, அனைத்து திட்டங்களும் செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விளக்கமளித்துள்ளது.தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலை இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அரசின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதி திராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், “விடுதிகளுக்கு ஆண்டுதோறும் பராமரிப்புச் செலவினமாக ரூ.10 கோடி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2021-2022 ஆம் ஆண்டு சட்டமன்ற புதிய அறிவிப்புகளின் கீழ் ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 366 விடுதிகளில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் உள்ள 7 கல்லூரி மாணவ / மாணவியர் விடுதிகளிலும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 49 விடுதிகளுக்கு ரூ.85.75 கோடி செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 33 நலத்திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்ட திட்டங்கள் 2021 – 2022 புதிய அறிவிப்புகளாகும்.இதில் கடந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் விடுதிகள் தாமதமாக திறக்கப்பட்டதன் காரணமாக  இத்திட்டங்களை செயல்படுத்த இடர்பாடுகள் ஏற்பட்டதால் இத்திட்டங்கள் அனைத்தும் இந்நிதியாண்டில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படாமல் விடுபடவில்லை. மாறாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் கோவிட் தொற்று காரணமாக இடர்பாடுகள் ஏற்பட்ட திட்டங்களுக்கும் நடப்பாண்டில் முழுமையாக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், நடப்பாண்டில் புதிய அறிவிப்புகளின் கீழ் 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் புதிய நூலகங்களும், 25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இணைய வழி நூலகங்களும் ரூ.70 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெற பெற்றோர் ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்று கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கான உதவித் தொகை மற்றும் முழு நேர முனைவர் படிப்பிற்கான உதவித் தொகை ஆகியவற்றிற்கான வருமான உச்ச வரம்பு 2021-2022 ஆம் ஆண்டு முதல் ரூ.8 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கான ஆண்டு வருமான வரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கிட அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு மாநில அரசின் கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டிற்கு ரூ.4.50 லட்சம் மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனையும் மாநில அரசின் உதவித்தொகை திட்டத்திற்கு இணையாக ஆண்டிற்கு ரூ.8 லட்சமாக உயர்த்திட அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டு

தமிழக அரசின் ஆதிதிராவிட நலத் துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், அந்த மாணவர்கள், அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய அவல நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் விடுதிக் கூரை, மழைக்காலங்களில் ஒழுகுவதாகவும், சரியான குடிநீர் கிடைக்காமலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் விடுதி மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மாதாமாதம் இதர செலவாக வழங்கப்பட வேண்டிய 150 ரூபாயும் வழங்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை என்றும் மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.20 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை?

மேலும், மாணவர் விடுதிகள் இத்தனை அலங்கோலமான நிலையில் இருக்க, அரசால் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 33 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்திருக்கிறது. சென்ற ஆண்டு என ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 20 நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கி, ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close