கேரள வெள்ளப்பாதிப்பு மிக மோசமான இயற்கை பேரிடர்-என மத்திய அரசு அறிவிப்பு !
கேரள வெள்ளப்பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. கடந்த 8–ந் தேதி முதல் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் பருவ மழைக்கு உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வந்த மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. இதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிவருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள வெள்ளப்பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் எனவும், கேரளாவின் மழை வெள்ளப்பாதிப்பிற்கு இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17,343 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.