கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை – சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை!
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளதால் கேரளாவில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கேரள மலை பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், 26 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிர் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், கண்ணணூரில் 3 பேரும், வயநாடு மாவட்டத்தில் 2 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர்.
பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ள போதிலும், அணைக்கு வரும் நீரின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது.
இது போலவே முல்லை பெரியாறு அணைக்கு வரும் நீர் வரத்தும் உயர்ந்து வருகிறது. அதனால் முல்லை பெரியாறு அணையும் திறக்கப்பட்டால், அந்த நீரும் இடுக்கி அணைக்கு வரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என, அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகள் செய்வதாக கூறியுள்ளார். நிலைமையை கண்காணித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.