கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடிய மழை வெள்ளத்தில் சிக்கி 265 பேர் உயிரிழப்பு, மேலும் 36 பேரை காணவில்லை – என கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 265 பேர் பலியாகி இருப்பதாகவும், 36 பேரை இன்னும் காணவில்லை என்றும் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத பேய்மழைய் கொட்டித்தீர்த்ததால் நிலைகுலைந்து போன கேரளா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலையை எட்டி வருகிறது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்கள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. வெள்ளப்பாதிப்பினால் சாலைகள் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதமடைந்து உள்ளன. கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் 10 நாட்களுக்கும் மேல் பெய்து மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வெள்ளக்காடாக மாறியது, கேரளா. ஆசியாவின் மிக பெரிய அணையான ‘இடுக்கி’ ஆணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துவிடப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 265 பேர் பலியாகியுள்ளனர் என்றும் இன்னும் 36 பேரை காணவில்லை என்றும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 31 சதவீத வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,287 நிவாரண முகாம்களில் 8.69 லட்சம் மக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான கேரள வெள்ளப்பாதிப்பினை மத்திய அரசு, ‘தீவிர இயற்கை பேரிடர்’ என அறிவித்தது.