கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்பதற்காக முப்படையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணியில் இறங்கி உள்ளனர்.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆளுநர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதோடு, ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளப்பகுதிகளை ஆய்வு செய்தார்.
கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும். லட்சக்கணக்கான வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி கேரளாவில் வெள்ளப்பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உதவ வேண்டும் எனவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் முன்னதாக பதிவிட்டுள்ளார்.
காங்கிரசின் சேவை மனப்பான்மை மற்றும் நாங்கள் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது என அதில் குறிப்பிட்டுள்ளார்.