காவிரியில் வெள்ளப்பெருக்கு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை !

காவிரியிலிருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையம் நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை போன்ற 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
காவிரி படுகையில் உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழக அணைகள் அனைத்தும் நிரம்பும் சூழலில், மேலும் 2 நாட்களுக்கு கேரளா, கர்நாடக மற்றும் தமிழகத்தில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு பாதிப்பினை தடுப்பது குறித்து அலோசிக்கப்படுகிறது. அதிக மழை வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வது பற்றியும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகளும் பங்கேற்றனர்.