காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் காமத் மரணம்!
முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குருதாஸ் காமத் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர் குருதாஸ் காமத். இவருக்கு வயது 63.
மும்பை வடகிழக்கு தொகுதியில் இருந்து கடந்த 1984, 1991, 1998 மற்றும் 2004ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார். பிறகு 2009ம் ஆண்டில் மும்பை வடமேற்கு தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மத்திய உள்துறை இணை மந்திரியாக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பினையும் வகித்து வந்துள்ளார். அதன்பின்னர் குருதாஸ் காமத் 2011-ஆம் ஆண்டு மந்திரி பதவியில் இருந்து விலகினார்.
மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். மும்பையில் உள்ள ஆர்.ஏ. போடர் கல்லூரியில் வர்த்தக படிப்பினை படித்தார். பின்னர் அவர் அரசு சட்ட கல்லூரியில் சட்ட படிப்பினையும் முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் உடல்நல குறைவால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று திடீர் மரணம் அடைந்து உள்ளார்.