புதுடில்லி: 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் உருவானதை அடுத்து வரும் 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் உருவாகி உள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அடுத்த 36 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா நோக்கி நகரக் கூடும். பின்னர் வலுவிழந்து தென் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு அருகே நவ.,15 ல் கரையை கடக்கும்.
இதன் காரணமாக நவ.,14 ,ல் தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் கனமழையும், நவ.,15 ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, நவ., 15ம் தேதியில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நவம்பர் 16 முதல் 18 வரை தமிழகம், கேரளா, ஆந்திர கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும், தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.