எய்ம்ஸ் மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி கமிஷன் இன்று விசாரணை !!!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவியை அகற்ற சொன்னது யார்? என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களிடம் இன்று விசாரிக்க உள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் தலைமையில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியவர்களின் உறவினர்கள், அப்போல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 85 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே எய்ம்ஸ் டாக்டர்கள் ஜி.சி. கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகிய மூன்று பேரும் ஆஜராக ஆணையம் சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது.
அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்று வந்த போது, எய்ம்ஸ் டாக்டர்கள் வர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
அப்போல்லோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்துவரும் சிகிச்சை குறித்த அறிக்கையை கொண்டு எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். இதனிடையே எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2016, டிசம்பர் 3-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள் டில்லிக்கு புறப்பட்டனர். அப்பொழுது, எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாகவும் அறிக்கை வெளியிட்டனர். மறுநாள் அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி(கார்டியாக் அட்டாக்) ஏற்பட்டது. மீண்டும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போல்லோ வந்தனர். ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் எக்மோ கருவி அகற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், எய்ம்ஸ் டாக்டர் நிதிஷ் நாயக் ஆஜராகியுள்ளார். எஞ்சிய 2 பேரும் இன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகின்றனர்.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பிறகு நாளை காலை 9 மணியளவில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எய்ம்ஸ் டாக்டர்களிடம் குறுக்கு விசாரணை செய்யவுள்ளார்