உத்திர பிரதேச வாக்காளர் பட்டியலில் இந்தி நடிகையின் புகைப்படம் – தொடர்ந்து எழும் சர்ச்சை…
உத்திரபிரதேச வாக்காளர் பட்டியலில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனால் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கியது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புகைப்படம் மாற்றி அச்சிடப்படுவதும், பெயர், பிறந்த தேதி போன்றவை மாற்றி அச்சிடப்பட்டு அட்டைகள் வழங்கப்படுவதும் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துக்கு பதிலாக, பிரபல இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 51 வயது பெண்ணின் புகைப்படத்துக்கு பதில் சன்னி லியோனின் படமும், 56 வயது ஆணின் படத்துக்கு பதில் யானை படமும் இடம்பெற்றுள்ளன. இதுபோலவே பலரின் புகைப்படங்களும் மாற்றி அச்சிடப்பட்டுள்ளது. மான், புறா ஆகியவற்றின் புகைப்படங்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து வந்த புகாரின் பேரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.