உத்திரபிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 26 பேர் பலி !
உத்திரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3 நாட்களில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி போன்ற மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை வெள்ளத்தால் சுமார் 100 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகினர்.
உத்திரபிரதேசத்தின் பல பகுதிகளில் நேற்றும் கனமழை தொடர்ந்தது. இதனால் ஜான்சி, எட்டவா, ரேபரேலி மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை குறித்து வெள்ள நிவாரண அதிகாரி விராஜ் குமார் கூறுகையில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் மேலும் 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.