உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு – கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு !

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் பத்திணம்திட்டா மாவட்டத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, 10 – 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த, உச்ச நீதிமன்றம், “அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்” என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதற்கு, பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, உடனடியாக நிறைவேற்றும் படி, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், ஏ.பத்மகுமார் கூறியதாவது: சபரி மலை கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிப்பதால், பக்தர்களின் எண்ணிக்கை, 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு சற்று அவகாசம் வேண்டும்.
பக்தர்களுக்கு, குறிப்பாக பெண் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தருவதற்காக, கூடுதலாக, 100 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டுள்ளோம். நிலக்கலில் நிலத்தை ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். “உண்மையான பெண் பக்தர்கள் எவரும், சபரிமலைக்கு வரமாட்டார்கள்” என்றே கருதுகிறோம். பெண் உரிமை ஆர்வலர்கள் மட்டுமே சபரிமலைக்கு வருவர். என அவர் கூறினார்.