இருமுடியுடன் சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பணியிடமாற்றம் !
சபரிமலை சர்ச்சையையடுத்து, பிஎஸ்என்எல் ஊழியரான ரெஹானா பாத்திமா கொச்சியில் இருந்து ரவிபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கடந்த 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளர் கவிதா என்ற மற்றொரு பத்திரிகையாளருடன் கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலை கோயிலுக்குள் இருமுடியுடன் செல்ல முயன்றார். போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்களை எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்த்து திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், கொச்சி அடுத்த படகு ஜெட்டி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்த ரெஹானா பாத்திமா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள், இணைய தளங்களில் வெளியாகின. இதற்கு, பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. அவரை இஸ்லாமிய சமூகத்தில் இருந்து நீக்கியதாக, கேரள இஸ்லாமிய ஜமாத் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இந்த சர்ச்சைக்கு பின்னர் ரெஹானா பாத்திமாவை கொச்சி பிஎஸ்என்எல் பதவியில் இருந்து தற்போது ரவிபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிடமாற்றம் குறித்து ரெஹானா பாத்திமா கூறுகையில், “எனது இடமாற்றம் ஒரு தண்டனையான நான் கருதவில்லை. நான் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஏற்கனவே கோரியிருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொச்சியிலிருந்து ரவிபுரத்திற்கு இடமாற்றத்தை கேட்டுக் கொண்டேன். இப்போது, அது நிறைவேறி உள்ளது” என்றார்.