இது ஜனநாயக நாடா?.. அல்லது போலீஸ் நாடா?.. உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் ஹரி ராகவன் கைது செய்யப்பட்டு 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது அனைத்து வழக்குகளிலும் அவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 24 ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் புதிய வழக்குகளில் ஹரி ராகவனை கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்காக வழக்கறிஞர்கள் சென்றபோது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் கூறியதாக அவரது மனைவி சத்தியபாமா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்
இந்த மனுவானது நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் புதிய வழக்குகளில் ஹரி ராகவனை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.
இது ஜனநாயக நாடா?.. போலீஸ் நாடா?.. என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.