ஆசிய விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்களை வென்று இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது!!!
18-வது ஆசியவிளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் மன்ஜித் சிங் மற்றும் ஜின்சன் ஜான்சன் களமிறங்கினர். போட்டி தொடங்கியதும் இருவரும் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தனர்.
கடைசி 100 மீட்டர் தூரத்தில் வேகம் காட்டிய மன்ஜித்சிங், முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர், பந்தய இலக்கை ஒரு நிமிடம், 46.15 விநாடிகளில் கடந்தார். இவரை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ஜின்சன் ஜான்சன், ஒரு நிமிடம், 46.35 விநாடிகளில் இலக்கைக் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம், இப்பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து நடைபெற்ற, கலப்பு பிரிவு 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் ஆரோக்கிய ராஜிவ், முகமது அனாஸ், ஹீமா தாஸ் மற்றும் பூவம்மா ஆகியோர் வரிசை கட்டி ஓடினர். இதில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது. இப்பிரிவில் பஹ்ரைன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
மேலும், நேற்றைய 9-வது நாள் போட்டிகளில் மட்டும் இந்தியா ஒரு தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இந்தியா ஒட்டு மொத்தமாக 50 பதக்கங்களை வென்று பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.