படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. தாமரை நோ சான்ஸ் : சீமான் பொளேர்!

சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
அதன்பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில் அவர் கூறியதாவது ,
பாஜகவிற்கு தமிழகம் மீது எப்போதும் அக்கறை கிடையாது. தமிழர்களை அவர்கள் எப்போதுமே ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. நாம் எல்லாம் பாஜகவிற்கு வெறும் ஓட்டுகள்தான்.
கஜா புயலின் போதே அது கண்கூடாக தெரிந்துவிட்டது. பிரதமர் மோடி இன்னும் கஜா புயல் சேதங்களை பார்வையிடவில்லை. கஜாவிற்கு நிவாரணமும் அளிக்கவில்லை.ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.
காவிரி, பாலாறு என்று நாம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இவர்களுக்கு தாமரை மலர தண்ணீர் வேண்டுமாம். முதலில் விவசாயிகளுக்கு தண்ணீர் வரட்டும். பிறகு பார்க்கலாம்.
தமிழகத்தில் தாமரை எப்போதும் மலராது. வேண்டுமானால் தமிழர்களுக்கு படர் தாமரை வர வாய்ப்புள்ளது, ஆனால் தாமரை வர வாய்ப்பில்லை இவ்வாறு அவர் கூறினார்.















